1.பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்?
தேவனுடைய பரிசுத்த மனிதர்களாகிய, மோசே, யோசுவா, தாவீது, மற்றும் பல தீர்க்கதரிசிகளும், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் தேவ ஆவியால் ஏவப்பட்டு பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்கள்.
2தீமோ, 3:16, 17: 2பேதுரு 1:20, 21, உபா 31 : 9-13, யோசுவா 24 : 26 – 28, யோவான் 21 : 24, 25. லூக்கா 1 : 1-4
பழைய ஏற்பாடு 39 புத்தகங்கள் எபிரேயு பாக்ஷையிலும், புதிய ஏற்பாடு 27 புத்தகங்களும் கிரேக்கு பாக்ஷையிலும் எழுதப்பட்டது. அவைகள் முழுவதும் மற்றும் சில பாகங்களுமாகச் சேர்ந்து 1250 பாக்ஷைகளில் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. முதல் முதலாக 1715-யில் தமிழ் வேதாகமம், டேனிக்ஷ தேச ஐயர் சீகென்பால்க் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.
2.வேதாகமத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும்?
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதை தியானித்து, தேடி, ஆராய்ந்து படிக்க வேண்டும். சங் 1:2, ஏசா 34:16, யோவான் 5 : 39. பற்பல காலங்களில் தேவன் வெளிப்படுத்திய சத்தியங்களை, யுகங்களுக்குரிய ஏற்பாடுகளாகவும், உபதேசம், உடன்படிக்கை, வாக்குத்தத்தங்கள், சரித்திரம், அடையாளம், நிழல், உவமை, தீர்க்கதரிசனங்களாகவும், சத்திய வசனங்களை நிதானமாய் பகுத்து ஆராய்ந்து படிக்க வேண்டும்.
மூல பாக்ஷைகளாகிய எபிரேய, கிரேக்கு, பதங்களின் மெய்யான அர்த்தங்களை கவனிக்கவேண்டும். இதோடு வேதாகமத்தின் பல்விதமான மொழிபெயர்ப்புகளையும் ஒத்துப்பார்த்து உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். அப்.17 : 11, 2 தீமோ 2:15.
3. தேவன் உண்டென்று நாம் அறிய முடியுமா?
எந்த ஒரு வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும், கட்டினவன் இல்லாமல் ஒரு வீடும் உண்டாகாது. இதன்படி நாம் காண்கிற எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் ஒருவர் இருக்கவே வேண்டுமென்றும் அவரைத்தான் தேவன் அல்லது கடவுள் என்றும் நாம் அறிய முடியும். (எபி. 3:3,4) இக்காரணத்தைக் கொண்டு தான் தாவீது “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது”. ஆகாய விரிவு, அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளை பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது” என்று பாடினார். சங் 19 : 1, 2
4.சத்திய வேதாகமம் கூறும் தேவனுடைய தன்மை, குணலட்சணங்கள் என்ன?
(a) தேவன் ஆதியும் அந்தமும் இல்லாதவராய் அநாதியாய் இருக்கிறவர். உபா 33:27. சங் 41:13, 90 : 1-3, 93:2, 106 :48 ரோமர் 16:25
(b) தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலிருந்து என்றும் மாறாமல் இருக்கிறவராகவே இருக்கிறார். அவர் ஒருவரே இருந்தவரும், இருக்கிறவரும், இருக்கப்போகிறவருமான நித்திய தேவன். அவர் எவ்விதமான அவதாரமெடுத்து மாறுகிறவர் அல்ல. யாத் 3:14, மல்கியா 3:6. வெளி 1:8.
(c) தேவன் ஒருவரே சாகாமையுடையவராய், தம்மில் தாமே ஜீவனுள்ளவராயிருக்கிறார். எரே 10:10. 1தீமோ 6:16. யோவான். 5:26. இவர் எவ்விதத்திலும் சாகவே முடியாது.
(d) தேவன் ஆவியாயிருக்கிறார். அதாவது எலும்பு, மாம்சம், இரத்தம் முதலியவை இல்லாமல் ஆவிக்குரிய தேகத்தில் செரூபியாயிருக்கிறார். யோவான் 4:24, 5:27, 6:46, ஆதி 1:26, லூக்கா 24:39, அவருக்கு ஒர் ரூபம் உண்டென்று அறிகிறோம்.
(e) தேவன் மனிதக்கண்களுக்கு காணப்படாதவராயிருக்கிறார். யாத் 33:20,யோவா1:18, 1தீமோ.6:16, 17: 1யோவா 4:12 தேவனுடைய பிரசன் னத்தை சிலர் தரிசனங்களில், அக்கினி, மேகம், மின்னல், மற்றும் தேவதூதருடைய தோற்றங்கள், அசரீரி வாக்குகள், மூலமாய் அறிந்துக்கொண்டார்கள். ஆனால் ஒரு மனிதனும் தேவனுடைய சுய ரூபத்தைக்கண்டதில்லை. ஆதி 16 :7-13, யாத் 3:2-4, 33 : 20 -23, ஏசாயா 6:1-5.
(f) தேவன் தூணிலும், துரும்பிலும், எங்கும் நிறைந்தவரல்ல, ஆனால் சர்வ உலகங்களின் ஓர் மத்திய முக்கிய ஸ்தானமாகிய பரலோகம் என்னும் தம்முடைய வாசஸ்தலத்திலே இருக்கிறார். ஆனால், அவருடைய சர்வ வல்லமையுள்ள ஆவி, சர்வ உலகமெங்கும் சென்று கிரியைச் செய்யக்கூடியதாயிருக்கிறது. அவருடைய ஆவிக்கு மறைவான இடமே கிடையாது. 2 நாளா 6 : 21, 30, 39, மத் 6:9, சங் 139 : 5-10, எரே 23 : 23, 24, ஆமோஸ் 9 :2,3. (g) தேவன் சர்வவல்லமையுடையவராயிருக்கிறார். ஆதி 17 :1, 35:11 யாத் 6:3, சங் 91:1, 2 கொரி 6:18, வெளி 1:8, 4:8, 21:22.
(h) தேவன் சர்வ ஞானமுள்ளவராயிருக்கிறார். யோபு 12:13, 16 எரேமியா 10:12 தானி 2:20. ரோமர் 11:33. 1தீமோ 1:17.
(i)தேவன் நீதியுள்ளவர். 2 நாளா 12:6, சங் 11:7, எஸ்றா 9:15,16 யோவா 17:25, வெளி 16:5, 7, 19:1,2.
(j) தேவன் பரிசுத்தராயிருக்கிறார். லேவி 11:44, 45, 1பேதுரு 1:15, 16 வெளி 4:8, ஏசா 6:3.
(k) தேவன் அன்புள்ளவராயிருக்கிறார். 1 யோவன் 3:1, 4:8.
(l) சிருக்ஷ்டிகர். ஆதி 1:1, 31, சங் 19 : 1-4, அப் 4:24, 14:15.
(m) ஒப்புமையில்லாதவர். யாத் 15:11, சங் 86:8, எரே 10:6 ஏசா.46:5, 40:18
5.வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?
“இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொல்லப்பட்ட தேவன், மோசேயினிடம் தமது நாமத்தை “யேகோவா” என்று தெரிவித்தார். என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறைதோறும் இதுவே என் பெயர் பிரஸ்தாபம் என்றார். யாத் 3:14,15. அவருடைய நாமம் “யேகோவா” என்று பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. சங் 68:4 83:17, 18. ஏசா 12:2, 26:4, எரே 33:2, ஓசியா 12:5, எரே 16:21. பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்” என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களில், “யேகோவா” என்று மூல பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக மத் 6:9.
6.இயேசு கிறிஸ்து யார்?
இவர் தேவனாகிய யேகோவாவின் முதல் சிருக்ஷ்டி. இயேசுவே தன்னைத் தேவனுடைய சிருக்ஷ்டிக்கு ஆதியானவர் என்றும், அப். பவுல் இவரை “சர்வ சிருக்ஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் கூறுகிறார். வெளி 3:14, கொலோ 1:15.
இவர் தேவனுடைய “ஒரே பேறான குமாரன்” ;என்றும் முதற்பேறானவர்” என்றும் அழைக்கப்படுகிறார். யோவா 3:16, சங் 89:27, எபி 1:6. இவர் ஒருவரே பிதாவாகிய தேவன் யேகோவாவினால் நேரடியாய் சிருக்ஷ்டிக்கப்பட்டவர். மற்ற யாவையும் தேவன் தமது குமாரனாகிய இயேசுவின் மூலம் சிருக்ஷ்டித்தார். ஆதலால் இவரை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
சாலொமோன் ராஜா பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு தேவனுடைய முதல் சிருக்ஷ்டியாகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
“கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வ முதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். “யேகோவா தமது சிருக்ஷ்டிகளில் என்னையே முதலாவதாக சிருக்ஷ்டித்தார். அல்லது படைத்தார்.” என்று திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும், தமிழ் புதிய திருப்புதலிலும் அவ்வாறே இருக்கிறது. பூமி உண்டாகும் முன்னும் ஆதி முதற்கொண்டும், அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகு முன்னே நான் ஜெநிபிக்கப்பட்டேன். மலைகள் நிலைப்பெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும், அதன் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும், உண்டாக்கு முன்னும், நான் ஜெநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன் : அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திவாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன் : நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியா யிருந்து, எப்பொழுதும் அவர் சமூகத்தில் களி கூர்ந்தேன்:” என்று எழுதப்பட்டிருக் கிறது. நீதி 8:22-30. தேவனுடைய முதற் பேறான குமாரனாகிய இயேசுவுக்கு “ஞானம்” என்னும் ஓர் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத் 11:19 1 கொரி 1:31. ஜெநிப்பிக்கப்பட்டேன். என்பதற்கு பிறப்பிக்கப்பட்டேன் அல்லது சிருஷ்டிக்கப்பட்டேன் என்று அர்த்தம். ஆதி 1:20 இயேசு பிதாவாகிய தேவனால் சிருக்ஷ்டிக்கப்பட்டவர்.
இயேசு கிறிஸ்துவுக்கு தேவனுடைய “வார்த்தை” என்ற ஓர் நாமமும் உண்டு. வெளி 19:13. அரசனுடைய பிரதிநிதியாக பேசுகிற ஒருவனை கிரேக்க பாக்ஷையில் “LOGOS” – “லோகாஸ்” அதாவது “வார்த்தை” என்று அழைத்தார்கள். தேவனாகிய யேகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தாருடன் பேசியபடியால் அவருக்கு “தேவனுடைய வார்த்தை” என்னும் பெயர் பொருத்தமாயிருக்கிறது. யோவான் 12:49. உபா 18:18,19. அப் 3:22:23, எபி 1:1:2. இக்காரணத்தை முன்னிட்டு யோவான் 1:1-3யில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
“ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். பிதாவாகிய தேவன் யோகோவாவிடம், வார்த்தை எனப்பட்ட குமாரனாகிய இயேசு, தேவனாக இருந்தார் என்று காட்டப்பட்டிருக்கிறது.
எபிரெய பாக்ஷையில் “எல்லோயிம்” (“ELOHIM”) என்னும் பதம் “தேவன்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. “எல்லோயிம்” என்றால் “வல்லவர்” என்று அர்த்தம். இந்த அர்த்தத்தின்படி, வல்லவர்களான மோசே, நியாயாதிபதிகள், தூதர்கள், தேவனுடைய வார்த்தையைப் பெற்ற வேதனுடைய குமாரர்கள் யாவரையும் “தேவர்கள்” என்று அழைக்கப் பட்டிருக்கிறது. யாத் 4:16, 7:1. (தேவர்கள் ,நியாயாதிபதிகள் யாத் 22:28) சங் 82:1-6. யோவான் 10:34-36. பொல்லாத கிரியைகளில் ஓர் வல்லவனாயிருக்கும் சாத்தானையும் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2 கொரி 4:4.
கீழ்க்கண்ட இந்த வசனத்தை கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால், “In the beginning was the Logos, and the Logos was with THE GOD and the Logos was God” என்று இருக்கிறது. இவ்விதமாய் கிரேக்க பாக்ஷையில் பிதாவாகிய தேவனை ““THE GOD” = தி காட், மகாதேவன் என்றும், வார்த்தையானவராகிய இயேசுவை “a god” ஒரு தேவனாகவுமிருந்தார் (ஏ காட்) என்றும் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. (Diaglott john 1:1)
பிதாவாகிய தேவன் யேகோவாவை வேதாகமத்தில், தேவாதிதேவன், மகாதேவனும் எல்லா தேவர்களுக்கும் மகாராஜனும், எல்லா தேவர்களிலும் பயப்பட்டத்தக்கவர், தேவர்களை நியாயம் விசாரிக்கும் தேவன், என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உபா 10:17, சங் 82:1, 95:3, 96:4, 97:7,9 136:2, 138:1. வானத்திலும் பூமியிலும் தேவர்கள் என்பவர்கள் உண்டாயிருந்தாலும், நமக்கு பிதாவானவரே மெய்த்தேவன், மற்றும் இயேசு கிறிஸ்து, நமது கர்த்தர் 1கொரி 8:5,6.
திருச்சபையிலுள்ள தேவனுடைய பிள்ளைகளை தேவர்கள் என்றும் சங் 82:1-6. யோவான் 10:34-36. திருச்சபைக்கு தலைவரான இயேசுவை வல்லமையுள்ள தேவன் என்றும் ஏசாயா 9:6, இயேசுவுக்கு தலைவரும், அவரைவிட சகலத்திலும் பெரியவரான பிதாவானவரை “சர்வ வல்லமையுள்ள தேவன்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி 17:1, 28:3, 35:11, யாத் 6:2,3 வெளி 1:8, 4:8.
அனுப்பப்பட்டவர் தன்னை அனுப்பினவரிலும் பெரியவரல்ல. என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று இயேசுவே கூறினார். யோவான் 13:16 14: 28 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். 1கொரி 11:3. தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் : தமக்கு சகலத்தையும் கீழ்ப்படுத்தின பிதாவாகிய தேவன் யேகோவாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பார் 1கொரி 15:28.
பிதாவானவர் குமாரனுக்கு ஜீவனை கொடுத்திருக்கிறார். யோவான் 5:26, இயேசு பிதாவினால் பிழைக்கிறார். யோவான் 6:57,2கொரி 13:4. மரித்த இயேசுவை நமது பிதாக்களின் தேவன் உயிரோடே எழுப்பினார். அப் 2:24-32. 5:30,31.
தேவன் தமது ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவினிடம் வார்த்தையாயிருந்தவர், மாம்சமானார். அதாவது பரிசுத்த ஆவியாகிய தேவ வல்லமையால் கன்னிமரியாளின் கர்ப்பத்தில் உற்பவித்து, பாலகனாய் பிறந்து, இயேசு என்று அழைக்கப்பட்டு, முப்பத்து மூன்றரை வருக்ஷம் ஜீவித்து, உலகத்தின் பாவங்களுக்காக, தம்மைத்தாமே பரிசுத்த பலியாக மரணத்தில் ஒப்புக்கொடுத்து, பிறகு மூன்றாம் நாள் தேவனால் உயிரோடே எழுப்பப்பட்டு பரலோக மகிமையில் பிரவேசித்தார். யோவான் 1:14, 3:14, 15; லூக்கா 1:26-35. எபி 1:1-3. அவர் பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
7.“நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு கூறியதின் அர்த்தம் என்ன? யோவான் 10:30.
சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இருவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் கிரியையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார். யோவான் 10:26-30. பிதாவும், குமாரனும் ஒன்றாய் இருப்பது போல விசுவாசிகளாகிய சபையார் யாவரும் ஒன்றாய் இருக்க வேண்டுமென்று இயேசு ஜெபித்தார். யோவான் 17:11, 21-23. ஒருமைப்பாட்டில் குமாரன் பிதாவிலும், நாம் குமாரனிலும், குமாரன் நம்மிலும் இருக்கிறார்.
8.“என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று இயேசு சொன்னதின் பொருள் என்ன? யோவான் 14:9
பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று பிலிப்பு என்னும் சீஷன் இயேசுவைக் கேட்டார். பிதாவாகிய தேவனை ஒருவரும் கண்டதில்லை. அவர் மனிதரால் காணக்கூடாதவராயிருக்கிறார். யாத் 33:20. யோவான் 1:18. 1தீமோ 6:16, 17.
இயேசுகிறிஸ்து அதரிசனமான பிதாவாகிய தேவனுடைய தற்சொரூபமா யிருக்கிறார். கொலோ 1:18. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் கண்டும் இருக்கிறீர்கள் என்று யோவா 14:7 இயேசு கூறினார். இயேசுவின் உபதேசத்தால் சீஷர்கள் தங்களுடைய அறிவாகிய மனக்கண்களால் பிதாவை கண்டுகொண்டார்கள். ஆனால் பிதாவின் சுயரூபத்தை அவர்கள் யாவரும் காணவில்லை என்று இயேசுவே கூறினார். யோவான் 5:37. 6:46. எபே 1:17-19.
9. இயேசு கிறிஸ்துவுக்கு “நித்திய பிதா” என்னும் பெயர் ஏன் கொடுக்கப்பட்டது? ஏசாயா 9:6.
பரம பிதாவின் குமாரன் ஆதாம், தற்காலத்திலுள்ள சகல மனித ஜாதியாயிருக்கும் பிதா ஆனால் பிதாவாகிய ஆதாம், பாவஞ்செய்து, தனக்கும் தன் சந்ததியார் அனைவருக்கும் மரணத்தை வரப்பண்ணினார். ரோமர் 5:12. பரலோகத்திலிருந்து வந்த தேவ குமாரன் இயேசுவை கடைசி ஆதாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “முந்தின மனுக்ஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றும், பிந்தின ஆதாம் உயிர்பிக்கிற ஆவியானார்” என்றும் பவுல் கூறுகிறர். 1கொரி 15:45, பிந்திய ஆதாமாகிய இயேசு முந்திய ஆதாம் மற்றும் அவருடைய சந்ததியார் அனைவருக்காக தம் ஜீவனைக் கொடுத்து அவர்களை உயிரோடே எழுப்பி, அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் “உயிர்ப்பிக்கிற ஆவியானார்”. ஆதலால் கடைசி ஆதாமாகிய இயேசு நமக்கு நித்திய பிதாவாக கொடுக்கப்பட்டிருக்கிறார். பரம பிதாவாகிய யேகோவாவின் குமாரனாகிய இயேசு நமக்கு “நித்திய பிதாவாக” கொடுக்கப்பட்டிருக்கிறார்.
ரூதரஆம், மாபெபட், மற்றும் ரோமன் கத்தோலிக்கியரின் (Dway) டூவே, என்னும் ஆங்கிலேய வேதாகம மொழிபெயர்ப்புகளில், “Father of Futurity”. “Father of the world to come”..அதாவது “எதிர்கால பிதாவென்றும்” “இனிவரப்போகும் யுகத்தின் பிதா” என்றும் சரியாய் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. இயேசுவின் இரண்டாம் வருகையையொட்டி இனி வரப்போகும் புதிய யுகத்தில் இயேசு மரித்தோரை எழுப்பி ஜீவனைக் கொடுக்கப்போகும் திட்டத்தின்நிமித்தம், இவரை “எதிர்கால பிதா” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
10. பரிசுத்த ஆவி என்றால் என்ன?
தேவன் பரிசுத்தர், அவரிடத்திலிருந்து வரும் காணப்படாத அவருடைய சக்தியை பரிசுத்த ஆவியென்று சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவி அநேக தீர்;க்கதரிசிகளுக்கும், பக்தர்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சபையாருக்கும் பற்பல தெய்வீக காரியங்களைச் செய்யக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியை உன்னதமான வருடைய பலம் என்றும், உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. லூக்கா 1:35. 24:49. அப் 10:38.
இயேசு வாக்குத்தத்தம் செய்த பரிசுத்த ஆவியை “தேற்றரவாளன்” என்று சொல்லிருப்பதால் அதை ஓர் ஆளாக சிலர் சாதிக்கிறார்கள். யோவன் 14:16,16:7, 13, “தேற்றரவாளன்” என்னும் சத்திய ஆவியை இயேசு உன்னதத்திலிருந்து வரும் பெலன் என்றார். லூக்கா 24:49. இந்த சத்திய ஆவியை தேவன் பெந்தேகோஸ்தே என்னும் நாளில் சபையார் மேல் ஊற்றினார். அல்லது பொழிந்தருளினார். அப் 2:1-4, 17, 33, “தேற்றரவாளன்” ஓர் ஆளாக வரவில்லை. ஆனால் வாக்குத்தத்தின்படி தேவனுடைய ஆவியாகிய பலன் ஊற்றப்பட்டது.
கிரேக்க பாக்ஷையில் உயிர் இல்லாப் பொருட்களையும், அவர் இவர், என்று சொல்லப்படும். ஆங்கிலேயத்திலும், சூரியனை அவன் என்றும், சந்திரன் கப்பல் போன்ற சிறப்பான பொருள்களை அவள் என்றும், சொல்லப்படும், இதுபோலவே பரிசுத்த ஆவியை கிரேக்க பாக்ஷையில் உயர் திணையில் சொல்லப்பட்டிருக்கிறது.
11.பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இம்மூவர், சமநித்தியர், சரிசமமானவர்கள், மூவரும் ஒருவரே, ஒருவரே மூவராகவும், திரியேக தேவனாகவும் இருக்கிறார்கள் என்ற உபதேசம், சரியானதா?
“திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது. திரியேகதேவன் என்னும் பதமே, பைபிள் வேதாகமத்தில் கிடையாது. இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை என்றும் 1 இராஜா 8:23, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை என்றும் சங் 86:8, 113:5. யாத் 15:11. 2சாமு. 7:22. “இப்படியிருக்க என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்றும் பரிசுத்தர் சொல்லுகிறார்”.யாருக்கு என்னை சாயலும், சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? என்று தேவன் கேட்கிறார். ஏசா 40:25, 46:5
சத்திய வசனம் இவ்வாறு இருக்கும் போது, குமாரனும், பரிசுத்த ஆவியும், பிதாவாகிய தேவனுக்கு சரிசமமானவர், சமநித்தியர் என்று சொல்லுவது தப்பறையான உபதேசம். லூசிபர் என்னும் தேவ தூதன் “நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்: உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று சொல்லிக்கொண்டு பெருமைப்பட்டதால், அவனே தேவனுடைய விரோதியான சாத்தானும் பிசாசுமானான். ஏசா 14:14. பிலி. 2:6-11 இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமை யாக்கினார் என்று வாசிக்கிறோம். இயேசுவானவர், சாத்தானைப்போல் கொள்ளையாடி தேவனுக்கு சமமாயிருக்க எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கிக்கொண்டு, மரணப்பரியந்தம் கீழ்படிந்த படியால் தேவனே அவரை ஓர் விசேக்ஷித்த மகிமைக்கு உயர்த்தினார் என்று அறிகிறோம்.
பிதாவாகிய தேவனே, மாம்சத்தில் அவதரித்தார் என்று காட்ட ஓர் தவறான மொழிபெயர்ப்பு உண்டு. அதாவது”தேவனே மாம்சத்திலே வெளிப்பட்டார்” 1தீமோ 3:16. இதை எல்லாத்திருத்திய வேதாகமங்களில் “அவர்” (அதாவது கிறிஸ்து) “மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
1யோவான் 5:7யில் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ;ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் : பூலோகத்திலே) என்று பிராக்கட்டுக்களுக்குள் காணப்படும் இந்த வசனம், திரியேகத் தத்துவத்தை ஸ்தாபிக்க ஏதோ ஒரு குருவானவரால் வேதாகமத்தில் கி.பி.500க்கு பிறகு தவறாக சேர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த வசனம் கி.பி.மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வெகு பூர்வ கிரேக்க வேதாகமங்களில் இல்லாததால் இப்போது அச்சிடப்படும் எல்லா திருத்திய மொழிபெயர்ப்புகளிலும் இந்த வசனம் நீக்கப்பட்டிருக்கிறது.
தேவனுடைய வேதாகமத்தில் “ஒன்றும் கூட்டவும், ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்ற கட்டளைக்கு நேர் விரோதமாய்ச் சேர்க்கப்பட்ட வசனம், நியாயப்படி இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது உபா 4:2, வெளி 22:18, 19
யோவான் 17:3.ஒன்றான மெய்த்தேவனாகிய யேகோவா: அவர் அனுப்பிய அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்: பரிசுத்த ஆவி, தேவனிடமிருந்து வரும் உன்னத பலன் என்று வேதாகமம் திட்டவட்டமாய் கற்பிக்கிறது. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர்; அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” என்று இயேசு ஜெபித்தார். யோவான் 17:3.
12. தேவ தூதர்கள் யார்?
தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வான மண்டலத்துக்குரிய தேவதூதர்களை, ஆவியின் சரீரத்தில் சிருக்ஷ்டித்தார் கொலோ 1:15-17. சங் 104:4, எபி 1:7. 1கொரி 15:40. தேவதூதரிலும் சிலர் கேரூப் என்றும் சிலர் சேராபீன்கள் என்றும், தேவதூதர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். சங் 80:1, ஆதி 3:24 எசே 10:1-10 ஏசா 6:2. இவர்களின் தொகை ஆயிர ஆயிரமும், பதினாயிரங்களாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சங் 68:17. தானி7:10. மத் 16:27. வெளி 5:11. தேவதூதர்கள் தேவகட்டளையின்படி, பரிசுத்த மனிதர்களுக்குச் சகாயம் செய்ய அனுப்பப்படுகிறார்கள். ஆதி 16:7. யாத் 3:2. 1இரா 19:5. தானி 6:22. மத்18:10. எபி 1:13, 14. தேவ விரோதிகளை அழித்துப்போடவும் தேவதூதர்கள் அனுப்பப்பட்டர்கள். ஏசா 37:36. அப் 12:23. இஸ்ரயேலரின் பிரயாணத்தில் அவர்களோடு உதவிக்காக சென்ற தூதனானவரே, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவென்று பவுல் கூறுகிறார். யாத் 23: 20-23. 1கொரி 10: 1-4. ஜனத்தின் (இஸ்ரயேல்); புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய “மிகாயேல்” என்றும், இயேசு கிறிஸ்து அழைக்கப்பட்டிருக்கிறார். தானி 12:1-3.
13. மற்ற சிருக்ஷ்டிகள் யாரால் சிருக்ஷ்டிக்கப்பட்டது?
வானத்தையும், பூமியையும் அவைகளின் சர்வ வஸ்துக்களையும், காணப்படுபவை, காணப்படாதவைகள் யாவையும், உலகங்கள் அனைத்தையும் தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சிருக்ஷ்டித்து, அவரையே சர்வத்துக்கும் சுதந்திரவாளியாகவும் நியமித்தார். யோவான் 1:3 எபே 3:11 கொலோ 1:15-17. எபி 1:2.
14. தேவன் பூமியை ஏன் சிருக்ஷ்டித்தார்?
பூமியை வெறுமையாய் இருக்க சிருக்ஷ்டியாமல், அதை மனித குடியிருப்புக்காகவே படைத்தார். ஏசா 45:18. தேவனுக்கு கனத்தையும், மகிமையும் செலுத்தக்கூடிய பரிசுத்த பூரண மனுமக்கள், சதாகாலம் குடியிருக்கவே இப்பூமியை; சிருக்ஷ்டித்தார். ஏசா 43:7. சங் 115:16. மனிதர் பலுகி பெருகி பூமியை நிரப்புகள் என்று ஆதி தந்தை, தாயை தேவன் ஆசிர்வதித்தார். ஆதி 1:26-28.
15. மனிதனை தேவன் எப்படி சிருக்ஷ்டித்தார்?
தேவனாகிய யேகோவா மனுக்ஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுக்ஷன் ஜீவாத்துமாவானான். ஆதி 2:7. சரீரமும், ஜீவ சுவாசமும் சேர்ந்து மனிதன் ஓர் ஆத்துமாவானான். மனிதனுக்குள் தேவன் சாகாத ஓர் ஆத்துமாவை வைக்கவில்லை.
16. மிருகங்கள், பறவைகள் எப்படிச் சிருக்ஷ்டிக்கப்பட்டது?
இவை யாவும் மண்ணினால்தான் சிருக்ஷ்டிக்கப்பட்டது. இவைகளுக்கும் ஜீவ சுவாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதி 2:19. 7:21,22. ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே. பிர 3:19.
17. தேவன் ஆதி மனிதனுக்கு கொடுத்த கட்டளை என்ன?
ஏதேன் தோட்டத்தில் “நன்மை தீமை” அறியத்தக்க விருட்சத்தின்
கனியைப்புசிக்க வேண்டாம் என்றும், அதை புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள் என்றும் கட்டளை கொடுத்தார். ஆதி 2:16,17.
18. பாவத்தின் ஆரம்பம் என்ன, மற்றும் சாத்தான் யார்?
ஏதேன் தோட்டத்தி;ல், ஆதாம்; ஏவாள் என்னும் நமது ஆதிப்பெற்றோரை பாதுகாக்க, ஒரு கேரூப்(தேவதூதன்) வைக்கப்பட்டிருந்தான். இவனே தேவனுக்கு சரிசமானமாக வேண்டுமென்று தேவனை எதிர்த்து அவருடைய விரோதியான “சாத்தான்” ஆனான். ஏசாயா 14:12-14. எசே 28:12-14 நோவாவின் காலத்தில் மனித குமாரத்திகளுடன் சம்மந்தம் கலந்த தேவகுமாரர் (அதாவது ராட்சதர் என்று சொல்லப்பட்டிருக்கும் “நெப்பலீம்”) விழுந்து போன தேவதூதர்கள் பாவஞ்செய்து கெட்டவர்கள், இப்போது பொல்லாத ஆவிகளாய், ஆகாய மண்டலத்தில் இருந்து கொண்டு மனிதரை சகலப் பாவங்களுக்குள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதி 6:1-4. 2பேது 2:4. யூதா 1:6. எபே 2:1,2. 6:12. தேவன் தமது பரிசுத்த வான்களையும் நம்புகிறதில்லை. வானங்கள் அவர் பார்வைக்கு சுத்தமானவைகள் அல்ல. அதாவது இங்கு வானம் என்பது அதிலுள்ள பொல்லாத அசுத்த ஆவிகளைக் குறிக்கும் யோபு 15:15.
19. மனிதருக்குள் பாவம் எப்படி பிரவேசித்தது?
தேவன் சர்பத்தின் மூலம் ஸ்திரியை வஞ்சித்து, தேவன் புசிக்க வேண்டாம் என்று கொடுத்த கட்டளையை மீறச்செய்து, சாகவே சாவீர்;கள் என்று தேவன் சொல்லியிருக்க, சாத்தான் ஏவாளிடம் நீங்கள் சாகவே சாவதில்லையென்று பொய் சொல்லி, வஞ்சித்தான். ஆதி 3:1-4. இக்காரணத்தால் சாத்தானை, பொய்யனும், பொய்க்குப் பிதாவும், மனிதக்கொலை பாதகனும்; என்றும் இயேசு சொன்னார். யோவான் 8:44. தேவனுடைய கட்டளையை மீறுவது பாவம். 1யோவான் 3:4. பாவத்தின் சம்பளம் மரணம். ஆதி 3:19. ரோமர் 6:23. மரணத்துக்கு அதிகாரி சாத்தான். எபி 2;:14. மரணம் மனிதனுக்கு ஓர் சந்துரு.1கொரி 15:26.இப்படியாக ஒரே மனிதன் ஆதாமின் மூலம் உலகத்தில் பாவமும், மரணமும், பிரவேசித்து விட்டது. நாமும் சுபாவப்படி, பாவிகளாயிருப்பதால், மரணம் யாவர் மேலும் வந்துக்கொண்டிருக்கிறது. ரோமர் 5:12.
20. மரணத்திற்கு பிறகு மனித நிலைமை என்ன?
மனிதனே ஓர் ஜீவ ஆத்துமா. ஆதி 2:7. மனிதனுக்குள் சாகாமையுள்ள ஓர் ஆத்துமா கிடையாது. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் எசே 18:4. சரீரத்தின் உயிர் இரத்தம், ஆதி 9:4. லேவி 17:11. மரணத்தில் மனிதனுடைய ஆவி அல்லது சுவாசம் நீக்கப்படுகிறது. அவன் தன் மண்ணுக்கு திரும்புகிறான். அந்த நாளில் அவன் யோசனைகள் அழிந்துப்போம். நீ மண்ணாயிருக்கிறாய், நீ மண்ணுக்குத்திரும்புவாய் என்று தேவன் சொன்னபடி நிறைவேறுகிறது. ஆதி 3:19. சங் 146:4. உயிரோடிருப்பவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்: அவர்கள் சிநேகம், பகை, பொறாமை, வித்தை, அறிவு, ஞானம், ஒன்றும் தொடராது: சூரியனுக்கு கீழே செய்யப்படுகிறதிலே ஒன்றிலும் இனி என்றைக்கும் பங்கில்லை. அதாவது மரித்தவுடன், இப்போதே பிரதி பலன் கிடைக்காது. பிரசங்கி 9:5, 6,10. மரித்தோர் தேவனுக்கு, ஸ்துதி ஸ்தோத்திரம், செலுத்துவதில்லை. சங் 6:5, 49:14, 115:17. ஏசா 38:18.
21. வேதாகமத்தில் மரணத்தை எதற்கு ஒப்பிட்டு பேசப்படுகிறது?
மரணத்தை வேதாகமத்தில் நித்திரைக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. நல்லவர்களும், பொல்லாதவர்களும், மரித்தவுடன் ஓர் உணர்ச்சியற்ற நிலைக்குட்பிரவேசிப்பதால், அதை நித்திரைக்கு ஒப்பிட்டு தாவீது மரித்தவுடன் “நித்திரையடைந்தான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2சாமு 7:12.1 இராஜா 2:10. சங் 13:3. 76:5. 90:5. தானி 12:2. மத் 9:24. யோவான் 11:11.1 கொரி 15:20.51. 11:30.1தெச4:14, ஏசா 57:1,2. உயிர்த்தெழுதலின் காலம் வரும்வரை யாவரும் மரண நித்திரையில் இருப்பார்கள்.
22. பரலோகத்துக்கு சென்றது யார்?
ஆதாம் முதல் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரை பழைய ஏற்பாட்டுக்காலங்களில் மரித்தவர்களில் ஒருவரும் பரலோகம் செல்லவில்லை. “பரலோகத்திலிருந்து இறங்கின மனுக்ஷக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்று இயேசு கூறினார். யோவான் 3:13. தாவீது இன்னும் பரலோகத்திற்கு ஏறிப்போகவில்லை என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன் பிரசங்கத்தில் கூறினார். அப் 2:34.
23. பரலோகத்திற்கு இனி யாராவது போவார்களா?
ஆதாம் அவருடைய சந்ததியார் அனைவரும் பாவத்தின் மூலமாய் இப்பூமியில் நித்திய ஜீவிகளாய் வாழக்கூடிய சிலாக்கியத்தை இழந்தார்கள். தேவனுடைய திட்டத்தின்படி மனிதன் பூலோகத்துக்காகத்தான் சிருக்ஷ்டிக்கப்பட்டான். ஆதி 1:26-28, சங் 115:16. பழைய ஏற்பாட்டுக்குரிய திட்டத்தின்படி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, போன்ற நீதிமான்களுக்கும், இஸ்ரயேல் புத்திரருக்கும், பூமிக்குரிய ஆசிர்வாதங்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. தேவன் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தைக்காட்டி “நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுப்பேன் என்றார். ஆதி 13:14-17.
சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும், மத் 5:5, நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. சங் 37:22, 29, 34.
இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப்பிறகு, இவர் மூலமாய் “விசேக்ஷித்த வாக்குத் தத்தங்கள்” கொடுக்கப்பட்டது. பரம பிதாவின் பரம வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டென்றும், தான் போய், தம்முடைய சீஷர்களுக்காக ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணி, பிறகு மறுபடியும் வந்து அவர்களை அந்த (பரம) வாசஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்வதாக வாக்குத்தத்தம் செய்தார். எபி 8:5, யோவான் 14:2,3 இதை “பரம அழைப்பு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிலி 3:14, எபி 3:1. இந்த பரம அழைப்புக்குச் செல்லும் வாசல் இடுக்கமானதென்றும், இதைக் கண்டுபிடிக்கிறவர்கள் வெகுசிலரே என்றும் இயேசு கூறினார். மத் 7:13, 14.
இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசித்து, அவர் நாமத்தால் பாவமன்னிப்புக்கென்று ஞான ஸ்நானம் (அதாவது முழுக்குஸ்நானம்) பெற்று, பரிசுத்த ஆவியின் பெலத்தைப் பெற்று, உடன்படிக்கையின்படி சத்தியத்திற்காக, மரண பரியந்தம் பலியின் ஜீவியத்திற்குட்பட்டிருக்க வேண்டுமென்பது இதற்குரிய திட்டமாய் இருக்கிறது. அப்.2:38, சங் 50:5. ரோமர் 12:1. இயேசுவை இவ்விதமாய் பின்பற்றும் விசுவாசிகள் யாவரும், அவருடைய சபையாகவும், அவருடைய சரீரமாகவும், அவருடைய மணவாட்டியாகவும் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இத்திருச்சபையார் இயேசுவின் இரண்டாம் வருகையின் சமயத்தி;ல் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குப்பெற்று, திவ்விய சுபாவமான. ஆவிக்குரிய மகிமையான சரீரத்தைப்பெற்று, பரம வாசஸ் தலங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அப் 2:41-47. 1கொரி 12:12-18. எபே 1:23. வெளி 19:7,8. 2பேது 1:4.1கொரி 15:23, 50,51, 1தெச 4:13-18. பிலி 3:20. வெளி 20:6, மேலும் பரம அழைப்புக்கு பாத்திரவான்களாகிய சபையார், இனி வரப்போகும் தேவராஜ்யத்தில், இயேசுவோடு இந்த உலகத்தை ஆட்சிச் செய்து, சகல ஜாதி ஜனங்களையும், நியாயம் தீர்த்து, கீழ்ப்படிகிற யாவரையும் ஆசிர்வதிக்கும் அதிகாரம் பெறுவார்கள். லூக் 12:32,வெளி 5:9,10. சங் 149:5-9. 2தீமோ 2:11, 12, மத் 19:27,28.
தேவனுடைய ஏற்பாட்டின்படி இயேசுவின் மணவாட்டியாக இருக்கப்போகும் வகுப்பார் முத்தரிக்கப்பட்ட 1.44,000 பேர் என்றும், இவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் “ஓர் திரளான கூட்டத்தார்” ஆவியின் சரீரத்தைப் பெற்று மணவாட்டிக்கு, உதவியாட்களாக “தோழிகளின்” ஸ்தானத்தில் பரம ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்று அறிகிறோம். வெளி 7:4, 9-14. சங் 45:13-15. இவ்விதமான பரம அழைப்புக்குரியவர்கள் மாத்திரமே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த பெரிதான இரட்சிப்புக்குப்பிறகு, ஆயிர வருட ஆட்சிக்காலத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியும் யாவரும், மாம்ச சரீரத்தில் நித்திய ஜீவனைப் பெற்று இப்பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
24. பரதீசு என்றால் என்ன?
பூமியிலிருந்த ஏதேன் தோட்டத்தை “பரதீசு” என்று மூல பாஷையிலும், பெர்ஷியா பாஷையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. “பரதீசு” என்றால் ஓர் சிங்காரவனம், ஏதேன் தோட்டமாகிய பரதீசில்தான் ஜீவவிருட்ஷம் இருந்தது. ஆதி 2:8,7. வெளி 2:7. இயேசுவின் இரண்டாம் வருகையில் தேவராஜ்யம் இப்பூமியில் ஸ்தாபிக்கப்படும் போது, சாபத்திற்குட்பட்ட இப்பூமி, புதுப்பிக்கப்பட்டு ஏதேன் தோட்டம் அல்லது பரதீசைப் போல செழிக்கும் ஏசா 35:1-5. 51:3 55:12,13. எசே 36:34,35.இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரு கள்ளர்களில் ஒருவன், அவரை மெய்யான தேவகுமாரனென்று விசுவாசித்து, அவரை நோக்கி, “ஆண்டவரே நீர் உமது ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்” என்று மன்றாடினான். இயேசு அவனை நோக்கி “இன்றைக்கு” என்ற இயேசு சொல்லியதால், அக்கள்ளன் இயேசு மரித்த தினமே, தானும் மரித்து அவருடன் பரதீசுக்குப் போய் விட்டதாக, தப்பிதமாய் எண்ணப்படுகிறது. இயேசு மரித்த தினமே, அவருடைய ராஜ்யம், இப்பூமிக்கு வரவில்லை. அவருடைய இரண்டாவது வருகையில் அவருடைய ராஜ்யம் இப்பூமியில் ஸ்தாபிக்கப்படும். அப்பொழுது இயேசுவுடன் மரித்த கள்ளனும், உயிரோடு எழுப்பப்பட்டு, அவருடன் அவருடைய ராஜ்யத்தில் (பரதீசாக புதுப்பிக்கப்பட்ட இப்பூமியில்) இருப்பான்.
இனிவரப்போகிற தேவராஜ்யமாகிய பரதீசில் அவன் நினைக்கப்படுவான். அதாவது அவன் உயிரோடு எழுப்பப்பட்டு அவருடனிருப்பான் என்ற வாக்கை இயேசு அன்றைய தினமே அவனுக்குக் கூறினார். ஆங்கிலேய வேதாகமத்தில் இந்த வசனத்தில் உபயோகிக்கப் ட்டிருக்கும் ஓர் “கமா” குறிப்பை சரியான இடத்தில் மாற்றி வைத்தால், அர்த்தம் சரியானபடியாயிருக்கும். “ I say unto you, to-day thou shalt be with me in Paradise” என்றபடி, இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்றும் “I say unto you to-day, thou shall be with me in Paradise” என்றபடி நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய் என்று இன்றைக்கு மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்ற வார்த்தைகளே சரியான அர்த்தத்தைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.
இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த பிறகும் நான் என் பிதாவினிடம் (பரலோகத்திற்கு) இன்னும் ஏறிப்போகவில்லை என்றார். யோவான் 20:17. நாற்பது நாட்களுக்குப்பிறகே அவர் பரலோகம் சென்றார். அப் 1:3. ஆதலால் மரித்த அக்கள்ளன் இன்னும் மரண நித்திரையில் தான் இருக்கிறான் என்பது உண்மை.
25. ரோமன் கத்தோலிக்க கூறும் உத்தரிக்கும் ஸ்தலம் என்பது என்ன?
இவர்கள் கூறுகிறபடி, பரலோகத்திற்கும், நரகத்திற்கும் மத்தியில் உத்தரிக்கும் ஸ்தலம் என்னும் ஒர் ஸ்தலம் உண்டென்பதும், அங்குள்ள மரித்தோருடைய ஆத்துமாக்கள், குருமார்களின் பூசை, பிராாத்தனையின் பலனால் சுத்திகரிப்படைந்து, பரலோகம் செல்லும் என்பவைகளும், வேதாகமத்திற்கு நேர் விரோதமான உபதேசம், குற்றவாளிகள் யாவரும் கடைசி